சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அருகே, பசுவை திருடி இறைச்சிக்காக வெட்டி, தலையை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியக்குப்பம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன், 55; விவசாயி. வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இங்கு, கன்று ஈன்று, 10 நாட்களே ஆன பசு மாட்டை, மாட்டுப் பொங்கலன்று இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு போலீசில் காசிநாதன் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று காலை, பெரியக்குப்பம் கிராமத்திற்கு பின்புறம் செல்லும் புதிய பை - பாஸ் சாலையில், உரிக்கப்பட்ட தோல், தலையுடன் பசு மாடு கிடந்தது. இதைப்பார்த்து காசிநாதன் அதிர்ச்சியடைந்தார்.
இறைச்சிக்காக கறவை மாட்டை கொன்ற சம்பவத்தால், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இறைச்சிக்காக பசுவை கடத்திக் கொல்வது கடலுார் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
போலீசார் இது விஷயத்தில், இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.