பல்லடம்:பா.ஜ., மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:
பல்லடம் அரசு மருத்துவமனையில், முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின், 'பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா' காப்பீடு திட்டத்தில், ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்துடன் தமிழக அரசின் காப்பீடு திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பனை, தென்னை உள்ளிட்ட விவசாய தொழிலாளர்கள் பலரும் பயன்பெறுவர். ஏறத்தாழ, 1,300க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மத்திய அரசின் திட்டத்துடன் இணைந்த இத்திட்டத்தை விளம்பரப் படுத்தும்போது, அதில், பிரதமரின் போட்டோவும் இடம்பெற்று இருக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனையில் உள்ள விளம்பரத்தில், பிரதமரின் படம் இடம் பெறவில்லை.
எனவே, இது மத்திய அரசுடன் இணைந்து நடத்தும் திட்டமா? அல்லது தமிழக அரசின் காப்பீடு திட்டமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இது போன்ற மத்திய அரசின் திட்டம் சார்ந்த சுவர் விளம்பரங்களில், பிரதமரின் படம் இடம்பெற வேண்டும்.