அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சேவூர் ஊராட்சி, வையாபுரிகவுண்டம்புதுாரில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாக கட்டடம் பராமரிப்பின்றி தண்ணீர், மின்சார வசதிகள் இல்லாமல் பாழடைந்து உள்ளது.
கடந்த 2010--11ம் ஆண்டு ஊரக கட்டட பராமரிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை, முறையான பராமரிப்பு இல்லாததால், பெண்கள் பயன்படுத்துவதில்லை. செடிகள் அதிகளவில் சுற்றிலும் வளர்ந்து புதர்களாக மாறிய நிலையில், கழிவறைக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாமலும், மின்சார வசதிகள் இல்லாமலும் இரவு நேரத்தில் பயன்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் உள்ள காலனியில் வசிக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பெண்கள் பயன்படுத்த முடிவதில்லை. உடனடியாக கழிவறைக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி அப்பகுதியில் சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.