திருச்சி:திருச்சி, தஞ்சையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில், மாடு முட்டியதில், 46 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம், நவலுார் குட்டப்பட்டு கிராமத்தில், நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார். மொத்தம், 634 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்க, 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
இந்த ஜல்லிக்கட்டில் எட்டு மாடுபிடி வீரர்கள், ஏழு பார்வையாளர்கள், ஆறு காளைகளின் உரிமையாளர்கள் என, 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த மூவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் அருகே, திருக்கானுார்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 530 காளைகள், 285 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஏழு வீரர்கள், 10 காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள், விழா குழுவினர் என, 25 பேர் காயமடைந்தனர். ஒன்பது பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.