திருப்பூர்:திருப்பூர் நொய்யல் ரோட்டில் அவசர கதியில் நடந்த பணியின் காரணமாக, தற்போது மின் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி, திருப்பூர் மாநகராட்சி மற்றும் பிற அமைப்புகள் இணைந்து, திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் யுனிவர்சல் தியேட்டர் அருகில், மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா கோலகலமாக நடந்து முடிந்தது. இதற்காக, நொய்யல் நதிக்கரையோரம் சாலை போடும் பணி, வேலி அமைக்கும் பணி, மின்கம்பம் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் அவசரம், அவசரமாக நடந்தது.
இச்சூழலில், பொங்கல் திருவிழாவையொட்டி நொய்யல் நதிக்கரையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டது.
அதில், வழங்கப்பட்ட மின் இணைப்புகள் அனைத்துமே தரையிலிருந்து, இரண்டு அடி உயரத்தில் வெளிப்புறமாக இணைக்கப்பட்டுள்ளன.
மின் ஒயர்கள் முழுமையாக இன்சுலேசன் டேப் சுற்றப்படாமல் பாதுகாப்பு இல்லாமல் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக, தற்போது மின் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மின்கம்பம் அமைக்கப்பட்டதில் முழுமையாக பணிகளை முடித்து, விபத்து அபாயம் ஏற்படும் முன் தடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.