திருப்பத்துார்:நாட்றம்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவில், வாலிபர் இறந்ததால் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார், 36 பேரை கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, கல்நார்சாம்பட்டியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதில், திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, 280 காளைகள் பங்கேற்றன.
காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை விழா நடந்த போலீசார் அனுமதியளித்தனர்.
அதனால், 2:30 மணியுடன் விழா நிறுத்தப்பட்டது. ஆத்திரமடைந்த பரிசு பெறாத காளைகளின் உரிமையாளர்கள் சிலர், வேண்டுமென்றே தங்கள் காளைகளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விட்டனர்.
ஓடிய காளைகள், அங்கிருந்தவர்களை முட்டித் தள்ளின. இதில், ஜோலார்பேட்டை, கம்பியம்பட்டையைச் சேர்ந்த முஷாரப், 19, என்ற வாலிபர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆத்திரமடைந்த முஷாரப்பின் உறவினர்கள், தடியடி நடத்தியதால் தான் முஷாரப் இறந்ததாக கூறி, மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சு நடத்த வந்த போலீசார் மீது கற்களை வீசினர். விடிய, விடிய கலவரம் நடந்தது. திருப்பத்துார் எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கலவரம் நடக்காமல் இருக்க, 17 வயது சிறுவன் உள்ளிட்ட, 36 பேரை, நாட்றம்பள்ளி போலீசார் நேற்று கைது செய்து, சிறுவனை வேலுார் அரசு காப்பகத்திலும், மற்றவர்களை வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைத்தனர்.
சம்பவம் குறித்து திருப்பத்துார் ஆர்.டி.ஓ., லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.