மாமல்லபுரம், சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் கீழ், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி - சூலேரிக்காடு பகுதியில், கடல் நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை 2013 முதல் இயங்குகிறது.
இதில், தினமும் 11 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் அருகில், தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும், மற்றொரு ஆலை தற்போது அமைக்கப்படுகிறது.
இதை அமைச்சர்கள் நேரு, அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், அமைச்சர் நேரு கூறியதாவது:
நெம்மேலியில், நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 1,516.82 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. 68 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 49 கி.மீ., தொலைவிற்கு குழாய் புதைப்பு பணிகளில், 96 சதவீதம் முடிந்துள்ளது. ஜூலை 31க்குள் பணிகளை முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வேளச்சேரி, பல்லாவரம், ஆலந்துார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் ஒன்பது லட்சம் பேருக்கு, இதன் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
நெம்மேலியில், 11 கோடி லிட்டர் ஆலை, மீஞ்சூரில், 10 கோடி லிட்டர் ஆலை ஆகியவை இயங்குகின்றன. நெம்மேலி பேரூரில், 40 கோடி லிட்டர் உற்பத்தி ஆலையும் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.