விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை விழா மற்றும் திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில் பவுர்ணமி விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நாளை 21ம் தேதி அமாவாசை விழா மற்றும் வரும் பிப்ரவரி 5ம் தேதி திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஜோதி விழா நடக்கிறது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வசதியாக ஊராட்சி சார்பில் குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள், வள்ளலார் மடம், தற்காலிக பஸ் நிலையங்கள், கோவிலுக்கு வரும் வழிகளில் அதிகளவில் குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும்.
விழா நாட்களில் மின் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.