மூணாறு:மூணாறில் நான்கு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று பல பகுதிகளில் உறைபனி ஏற்பட்டதால் குளிர் வாட்டி வதைத்தது.
கேரளமாநிலம் மூணாறில் ஆண்டு தோறும் டிசம்பர் இறுதியில் காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் ஆகி உறைபனி ஏற்படும்.
இரண்டு ஆண்டுகளாக டிசம்பரில் மழை பெய்ததால் உறைபனி சற்று தாமதமாக ஜனவரியில் ஏற்பட்டது.
இந்தாண்டு மூணாறு அருகே செண்டுவாரை, லாக்காடு, தேவிகுளம் எஸ்டேட் பகுதிகளில் ஜன.9ல் காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உறைபனி ஏற்பட்டது.
அதன்பிறகு கன்னிமலை எஸ்டேட் உட்பட பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து தொடர்ந்து உறைபனி ஏற்பட்டு கடுங்குளிர் நிலவியது.
அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஜன.15 வரை இந்நிலை நீடித்தது.
இந்நிலையில் நான்கு நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று காலை மூணாறு நகர்,கன்னிமலை, செண்டுவாரை ஆகிய எஸ்டேட்டுகள், பாம்பாடும்சோலை தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 1, லாக்காடு எஸ்டேட்டில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்து உறைபனி ஏற்பட்டது. அதனால் குளிர் வாட்டி வதைத்தது.