திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில், 'சிசிடிவி கேமரா'க்கள் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளதால், விபத்துக்கான காரணம் அறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர், சுங்கச்சாவடி சந்திப்பு - பாரதியார் நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சென்னை துறைமுகம் நோக்கிச் செல்லும் கன்டெய்னர் லாரிகளுக்கு இச்சாலையே பிரதானம்.
இந்நிலையில், கனரக வாகனங்களால் அடிக்கடி இச்சாலையில் விபத்து ஏற்படும். இதில், குற்றவாளி யார் என்பதில் கண்டறிய, 'சிசிடிவி கேமரா'க்கள் பெரும் உதவியாக இருந்தன.
சில மாதங்களுக்கு முன், வாலிபர் ஒருவர் மீது, கன்டெய்னர் லாரி ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து போலீசார், கன்டெய்னர் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.
விசாரணையின் தொடர்ச்சியில், அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி கேமரா'க்களை ஆய்வு செய்த போது, வாலிபர் விரக்தியில், கன்டெய்னர் லாரி சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது தெரிந்தது. பின் வழக்கு மாற்றப்பட்டு, தற்கொலை என பதியப்பட்டது.
இதனால், கன்டெய்னர் லாரி ஓட்டுனரின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டது. இதுபோல், பல்வேறு வழக்குகளில் திருப்புமுனையாக, 'மூன்றாம் கண்' என வர்ணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
சென்னை கமிஷனராக விஸ்வநாதன் பணியாற்றிய காலகட்டங்களில், எண்ணுார் விரைவு சாலையில், தனியார் பங்களிப்புடன், அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
காலப்போக்கில் அவை முறையான பராமரிப்பின்றி தலைக்குப்புற கவிழ்ந்தும், சேதமடைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
இதனால், குற்றப் பின்னணிகளை கண்டறிவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, எண்ணுார் விரைவு சாலையில் சேதமடைந்துள்ள சிசிடிவி கேமராக்களை உடனடியாக சீரமைத்து பொருத்த வேண்டும்.
பின், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.