குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பூங்காவில் கோடை சீசனுக்காக, 2.84 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் மற்றும், 63-வது பழ கண்காட்சியையொட்டி, 2.85 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய தோட்டக்கலை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக நாற்று நடவு பணி, சிறப்பு பூஜைகளுடன் நேற்று துவங்கியது. ஊட்டி தோட்டக்கலை துணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் நாற்றுகளை நடவு செய்து, பணியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, தோட்டக்கலை பணியாளர்கள் நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், 'ஆன்ட்ரினம், சால்வியா, பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, பேன்சி, பிளாக்ஸ், பெட்டூனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, லேடிலேஸ், அமரான்ஸ், ப்ரிமுளா, கிளியோம், ஆஸ்டர், லுாபின், டேலியா,' உட்பட, 30 வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. ஐரோப்பியாவை தாயகமாக கொண்ட 'ரெனன்குலஸ்' மலர் நாற்றுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு நடவு செய்யப்படுகிறது.