செங்குன்றம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகளின் விளம்பர 'போர்டு' மற்றும் தனியாரின் விளம்பர 'பேனர்'கள் ஆகியவற்றை அகற்றிய போக்குவரத்து போலீசார், நடைபாதை கடைகளுக்கும் கட்டுப்பாடு விதித்தனர்.
செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் மொபைல் போன், ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றால், போக்குவரத்திற்கு இடையூறாக, 50க்கும் மேற்பட்ட 'டிஜிட்டல்' விளம்பர போர்டுகள், தனியாரின் விளம்பர பேனர்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தன.
மேலும், 150க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளும், மேற்கண்ட பிரச்னைக்கு காரணமாகின.
அதனால், போக்குவரத்து நெரிசலும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதும் தொடர்ந்தது.
குறிப்பாக, செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே, 80க்கும் அதிகமான நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. இவை மட்டுமின்றி, உரிய ஆவணங்கள் இல்லாத, 200க்கும் மேற்பட்ட வெளி மாவட்ட ஆட்டோக்கள், பேருந்து நிலையம் மற்றும் ஜி.என்.டி., சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
அதனால், சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்து பயணியர், பாதுகாப்பாக செல்ல முடிவதில்லை.
மேலும், அவசர மருத்துவ உதவிக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், பேருந்து நிலையத்தை கடந்து செல்ல காலதாமதமாகின்றன.
செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் உள்ள 'எஸ்.கே.எல்.எஸ்., மால்' செல்ல வரும் இரு சக்கர வாகனம், ஆட்டோ ஆகியவையும், ஜி.என்.டி., சாலையை ஆக்கிரமித்து, பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன.
அதனால், பிரதான போக்குவரத்திற்கான ஜி.என்.டி., சாலை, 'முட்டுச்சந்தாக' மாறிவிட்டது.
இந்த ஆக்கிரமிப்பால், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜி.என்.டி., சாலையின் இரு பக்கமும், 1.5 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட வேண்டிய பிரதான மழைநீர் வடிகாலுக்கான இடத்தை, ஓராண்டாக கையகப்படுத்த முடியாமல் நெடுஞ்சாலை துறை திணறுகிறது.
பொன்னேரி வருவாய்த்துறையும், அந்த சாலைக்கான எல்லையை வரையறுத்து கொடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது.
இது குறித்து, கடந்தாண்டு டிச., 8ம் தேதியும், நேற்று முன்தினமும், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதையடுத்து, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய், செங்குன்றம் ஜி.என்.டி., சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலற்ற போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நேற்று காலை முதல், போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதனால், பழைய மழைநீர் வடிகாலில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்திற்கு, அந்த சாலையின் இரு பக்கமும், தலா 30 அடி அகலத்திற்கு, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது.
மேலும், நடைபாதை கடைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார், மேற்கண்ட பணி இன்றும் தொடரும் என்றனர்.