கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தனியார் பஸ் கூரையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியான நிலையில் டிரைவர் மகேந்திரன், கண்டக்டர் முத்து இருளாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதுகுளத்தூரில் இருந்து பேரையூர், கருங்குளம், கோட்டைமேடு வழியாக கமுதிக்கு காலை நேரத்தில் தனியார் பஸ் சென்றது. இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தனியார் பஸ் கூரையில் ஏறியும், படிக்கட்டுகளில் தொங்கியும் பயணம் செய்தனர்.
இதனால் விபத்து அபாயம் உள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக விதிமீறலில் ஈடுபட்டதாக தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே நேரத்தில் மாணவர்களுக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.