சென்னை, வெளிவட்ட சாலையோர பகுதிகளில், மேம்பாட்டு பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கலந்தாலோசனை நிறுவனங்கள் தயங்குவதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் - மீஞ்சூர் இடையே, 62 கி.மீ., தொலைவுக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது. மொத்தம், 400 அடி அகலத்துக்கு திட்டமிடப்பட்டாலும், முதல்கட்ட திட்டத்துக்கு 236 அடி வரை பயன்படுத்தப்பட்டது.
தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையின் கிழக்கில், 164 அடி அகல பகுதி, எதிர்கால தேவைக்காக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியை வணிக ரீதியாக மேம்படுத்த போவதாக சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
இதனால், வெளிவட்ட சாலையின் திட்டமிடப்பட்ட அகலம், 236 அடியாக குறையும் என்றும், இது எதிர்காலத்தில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும் என்றும் புகார் எழுந்தது.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
சி.எம்.டி.ஏ.,வில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பிடிவாதம் காட்டுகின்றனர். இதற்காக, 2022 அக்டோபரில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கலந்தாலோசகர் தேடலுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு, கலந்தாலோசனை நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் மீண்டும் கலந்தாலோசகர் தேடலுக்கான புதிய அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
எதிர்கால தேவையைக் கருத்தில் கொள்ளாமல் செல்படுத்தப்படும் இத்திட்டத்தை நிறுத்த வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.