அவிநாசி:அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தத்தனுார் ஊராட்சியில் உள்ள ஆனைக்கல் பாளையத்தை சேர்ந்தவர் குமார்; ஆட்டோ டிரைவர். கடந்த வாரம் இவரது வீட்டில் இருந்த நாய்களில் ஒன்றை மர்ம நபர்கள் இறைச்சியில் விஷம் கலந்து கொன்றுள்ளனர். நேற்று மற்றொரு நாயை அதன் வாயில் கொடூர ஆயுதத்தால் வெட்டியுள்ளார்கள்.
இதையறிந்த அவர், நாயை கால்நடை மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். இது குறித்து சேவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க சென்றபோது, நாய் வளர்ப்பதற்கு லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் மட்டுமே புகாராக பதிவு செய்ய முடியும்; விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
தத்தனுார் ஊராட்சியில், கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் தொடர்ந்து ஒரு சிலரது வீட்டில் உள்ள ஆடு, கோழிகள் திருட்டு போய் உள்ளதாகவும், நாய்கள் இருந்தால் குரைத்து காட்டிவிடும் என்பதால் இது போன்ற வெறிச் செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தில் போத்தம்பாளையம் கிராமத்தில் ஆடு, கோழிகள் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அது குறித்து, சேவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் பொதுமக்களால் அளிக்கப்பட்டது. போத்தம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சியில் விஷ மருந்து கலந்து, ஆங்காங்கே வீசி சென்றனர். அதனை உண்ட மூன்று நாய்கள் இறந்தது. இது குறித்தும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இவ்வாறு, கிராமப்பகுதிகளில் கால்நடைகளை திருடிச் செல்லும் கும்பல், வெறித்தனமாக வாயில்லா ஜீவன்களை கொன்றும், கொடூரமாக தாக்கும் செயலை தடுத்து நிறுத்த, போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.