சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட 'மெட்ரோ ரயில்' திட்டத்தில், இதுவரையில் 336 மீட்டர் துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், 63,246 கோடி ரூபாய் மதிப்பில் 118.9 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் சுரங்கம் தோண்டும் கனரக இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்படும் பணி முதலாவதாக மாதவரத்தில் கடந்த ஆண்டு அக்., மாதம் துவங்கப்பட்டது.
336 மீட்டர் துாரம் பணி நிறைவு:
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் -- கெல்லீஸ் வரையிலான 9 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கைக்கு பிறகே, பாதுகாப்பாக சுரங்கம் தோண்டி வருகிறோம். இரு மார்க்கமாக மொத்தம் 18 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.
தற்போது வரை, மாதவரம் பால்பண்ணை முதல் முராரி மருத்துவமனை வரையிலான 336 மீட்டர் துாரத்திற்கு சுரங்கப் பாதை அமைத்துள்ளோம்.
சுரங்கப்பாதை பணியின்போது, 30 மீட்டருக்கு கீழ் நில அதிர்வு கண்காணிக்கப்படுகிறது. பெரும்பாலான பணிகள் இரவில் நடைபெறுகிறது. இதே தடத்தில் இரண்டாவது கனரக இயந்திரம் பயன்படுத்தும் பணியும் துவக்கி உள்ளோம். எனவே, பணிகள் இனி வேகமாக நடக்கும்.
அதுபோல், அடுத்தடுத்து கூடுதலாக சுரங்கம் தோண்டும் கனரக இயந்திரங்களை படிப்படியாக பயன்படுத்த உள்ளோம். சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, 18 முதல் 24 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.