மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 29. இவரது மனைவி திவ்யா, 26. ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, திவ்யா கருத்தடை சாதனம் பொருத்தி பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை படாளம் அருகே, சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கருத்தடை சாதனத்தை அகற்றும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நேற்று காலை 10:00 மணிக்கு சிகிச்சை நடந்ததாகவும், மதியம் 12:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி திவ்யா உயிரிழந்ததாகவும், உறவினர்களிடம் டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் திரண்டு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இதுகுறித்து, திவ்யாவின் உறவினர்கள், படாளம் காவல் நிலையத்தில், மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மீது புகார் அளித்தனர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் நடத்திய உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இறந்த பெண்ணின் சடலம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.