ஆண்டிபட்டி:வைகை அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வெளியேறியது. நேற்று காலை 11:00 மணிக்கு அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவு 869 கன அடியில் இருந்து 1769 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 53.15 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1411 கன அடியாக இருந்தது.
பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக நேற்று வினாடிக்கு 900 கனஅடி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கனஅடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி, - சேடப்பட்டி, குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது. முல்லை பெரியாறு அணையில் திறக்கப்பட்ட நீர் மட்டுமே வைகை அணைக்கு வந்து சேர்கிறது. வருஷநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை என்றனர்.