திருநெல்வேலி:''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் பா.ஜ.,வினர் தேர்தல் பணியாற்றி கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்வோம்,'' என, திருநெல்வேலி அருகே தச்சநல்லுாரில் பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அங்குள்ள அரசு பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டும் பணியை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பின் அவர் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட சுத்தமல்லியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க வலியுறுத்தியுள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., போட்டியிட்டுள்ளது. 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அங்கு கூட்டணி சார்பில் யார் நின்றாலும் தேர்தல் பணி செய்ய பா.ஜ., 14 பேர் கொண்ட பணிக்குழுவை நியமித்துள்ளது. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்வோம்.
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் நெருங்கும்போது அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். கவர்னர் ரவி சட்டவிதிகளுக்குட்பட்டு முறையாக செயல்பட்டு வருகிறார் என்றார்.