கோவை:பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள், திருநெல்வேலி ஐ.சி.எல்., மைதானத்தில், கடந்த 18ம் தேதி துவங்கியது.
இதில், முதல்கட்டமாக நடந்த மண்டல அளவிலான போட்டியில், வெற்றி பெற்ற எட்டு அணிகள் தகுதி பெற்று லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன.இதில், கோவை மண்டலத்தில் வெற்றி பெற்று, ஜெயேந்திர சரஸ்வதி அணி விளையாடுகிறது.
ஜெயேந்திர சரஸ்வதி முதல் போட்டியில், சென்னை ராமச்சந்திரா பள்ளி அணியை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்தது. நேற்று நடந்த போட்டியில், சோளிங்கர் வித்யா பீடம் பள்ளி அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த, ஜெயேந்திர சரஸ்வதி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. நவீன் (57), சித்தார்த் (43*) ரன் சேர்த்தனர்.
அடுத்து விளையாடிய வித்யா பீடம் அணியின் கேப்டன் ஹரி மட்டும் 64* ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, அணி, 19.1 ஓவர்களில் 91 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஜெயேந்திர சரஸ்வதி அணியின் சாய் கிருஷ்ணா நான்கு விக்கெட் வீழத்தினார். இதன் மூலம் இந்த அணி, 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.