ஜாம்பஜார், சென்னை, ஜாம்பஜார் மீரான் சாகிப் தெருவிலுள்ள ஒரு பீடா கடைக்கு, மாணவர்கள் கூட்டமாக வந்து செல்வதாக, தி.நகர் தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற தனிப்படையினர், பீடா கடையை கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த மாணவர் ஒருவர் வாங்கிய பொருளை சோதனை செய்தனர். அது கஞ்சா சாக்லேட் எனத் தெரிந்தது.
உடனே, பீடா கடையை சோதனையிட்ட போது, 8 கிலோ கஞ்சா சாக்லேட்கள் சிக்கின. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், பீடா கடை நடத்தி வந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர யாதவ், 41, என்பவரை கைது செய்தனர்.
இவர், பீஹாரில் இருந்து கஞ்சா சாக்லேட்கள் வாங்கி வந்து, மாணவர்களுக்கு விற்றது தெரிந்தது. சுரேந்திர யாதவை கைது செய்த தனிப்படை போலீசார், மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.