ராமநாதபுரம்,-திருப்பாலைக்குடியில் பள்ளிவாசல் ஜமாத் வழங்கிய இடத்திற்கு வருவாய் துறையினர் பட்டா வழங்க வேண்டும், என நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி தலைமையில் அப்பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:
திருப்பாலைக்குடி பள்ளிவாசல் ஜமாத் டிரஸ்ட் 1984 ல் வழங்கிய இடத்தில் வீடு கட்டி வசிக்கிறோம். அவ்விடத்திற்கு ஊராட்சியில் வரியும் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் பட்டா வழங்க விண்ணப்பித்தால் பொது பாதையாக உள்ளதாக கூறி பட்ட வழங்க மறுக்கின்றனர்.
இதே இடத்திற்கு சிலர் பத்திரம் பதிவு செய்து அப்போதே பட்டா வாங்கி வீடும் கட்டியுள்ளனர். பொதுப்பாதை, வண்டி பாதைக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் இடத்திற்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தினர்.
நா.த.க., ராமநாதபுரம் நகர தலைவர் வெங்கடேஷ், செயலாளர் அரவிந்த், ஒன்றிய தலைவர் தேவிப்பட்டினம் மதிவாணன், வக்கீல் பாசறை காதர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.