கோவை:இந்திய கிரிக்கெட் வாரியத்தின், 'விஜய் மெர்ச்சன்ட் கோப்பைக்கான' கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பஞ்சாப் அணியின் அன்மோல்ஜீத் ஆறு விக்கெட் வீழத்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த, பஞ்சாப் முதல் இன்னிங்சில், 238 ரன் எடுத்தது. அணியின் கேப்டன் அர்ஜூன் (52) அரை சதம் அடித்தார். பஞ்சாப் அணி, 76 ரன் முன்னிலை பெற்றது.
பின்னர், இரண்டாம் இன்னிங்சை துவங்கிய மத்திய பிரதேச அணியின் கேப்டன் மனல் சவுஹான் (38) ஆறுதல் அளித்தார். மற்ற பேட்டர்கள் நிலைக்கவில்லை. அணி, 172 ரன்னுக்கு சுருண்டது. அன்மோல்ஜீத் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி வெற்றிக்கு, 97 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற 97 ரன்கள் தேவை என்ற இலக்குடன், களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் விஹான் (55*) மற்றும் ரிஜூ ஸ்ரீவஸ்தவா (41*) பொறுப்பாக விளையாடி, விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச்சென்றது.