ஊட்டி:ஊட்டியில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்., களில் புதிய ரூபாய் காயின் பயன்படுத்தியும் குடிநீர் வராததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நீலகிரியின் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில், 19 வகையான 'பிளாஸ்டிக்' பொருட்கள், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் வாட்டர் ஏ.டி.எம்., வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, சுற்றுலா துறை சார்பில், ஊட்டி தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா, தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா என, மாவட்டம் முழுவதும், 70 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.டி.எம்., களில் ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் காயின் பயன்படுத்தி பாட்டிலில் குடிநீர் பிடித்து கொள்ளலாம்.
இந்நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கி, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய்களில் புதிய காயினை அறிமுகப்படுத்தியது. அந்த புதிய காயின்களை வாட்டர் ஏ.டி.எம்., களில் பயன்படுத்தினால் குடிநீர் வருவதில்லை. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.
ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்த கர்நாடக சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'நீலகிரியில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்., களில் புதிய காயின் பயன்படுத்தினால் குடிநீர் வருவதில்லை. இதனால், பழைய ரூபாய் காயின் தேடி அலைய வேண்டி உள்ளது. எனவே, வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரத்தில், சுற்றுலா துறை மாற்றங்கள் செய்ய வேண்டும்,' என்றனர்.