தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகள் மோதல்:4 பேர் காயம்
ஆர்.எஸ்.மங்கலம்: கவ்வூரை சேர்ந்தவர் ரெத்தினம் 40. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பழனிசெல்வம் 35, என்பவருக்கும் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் உறவினர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில், சின்னத்தம்பி 70, மதன்குமார் 17, ரேவதி 30, முனியம்மாள் 55, ஆகியோர் காயமடைந்தனர். ரெத்தினம் புகாரில் கவ்வூர் பழனிசெல்வம், மதன்குமார், ரேவதி, முனியம்மாள் ஆகியோர் மீதும், பழனிசெல்வம் புகாரில் ரோகின்குமார், ஹாரூன், ரெத்தினம், இளங்கோவன், கணபதி, வெள்ளையம்மாள், புவனேஸ்வரி ஆகியோர் மீதும் ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
தனித்தனி சம்பவங்களில்மூன்று பேர் தற்கொலை
ராமநாதபுரம்: மகாத்மா காந்தி நகர் நாகராஜ் மகன் முருகானந்தம் 26. இவர் உணவு பொருள் டோர் டேலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்தார். நண்பர்களுடன் மது அருந்துவதை வீட்டில் கண்டித்தனர். இதனால் மனமுடைந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
*கமுதி குண்டாறு தெருவை சேர்ந்த காந்தி மகன் பால பிரதீபன் 20. இவர் ராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள சாலுன் கடையில் பணிபுரிந்தார். அங்குள்ள தனி அறையில் சாப்பிட சென்றவர் மின்விசிறியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
*உச்சிபுளி: உச்சிபுளி சின்னுடையார் வலசையை சேர்ந்த நாகபிரபு மனைவி கற்பகவள்ளி 47. இவர் வயிற்று வலியால் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். உச்சிபுளி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுக்கடையில் திருட முயற்சி
ராமநாதபுரம்: காட்டூரணியில் உள்ள அரசு மதுபான கடையில் ஜன.18 ல் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். தகவலறிந்த மேற்பார்வையாளர் சேகர், விற்பனையாளர் ராஜேஸ்கண்ணன் பார்வையிட்டனர். கடை ஷட்டரின் 3 பூட்டில் ஒன்று மட்டும் உடைக்கப்பட்டிருந்தது. கடையை திறந்த போது பணம், மது பாட்டில்கள் திருடு போகவில்லை. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசுடன் ஒருவர் கைது
பரமக்குடி:எல்லைப்புற காந்தி தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் 53.இவர் வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு வெடிகள் வைத்திருந்தார். டவுன் எஸ்.ஐ., கருணாநிதி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சில்லரை வியாபாரத்திற்கு பட்டாசு வைத்திருந்த ரவீந்திரனை கைது செய்தார். அவரிடம் இருந்து 61 பாக்கெட் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கார் மோதி வாலிபர் பலி
தேவிபட்டினம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் வீரமுத்து 26. இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டினம் செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலை வழியாக டூவீலரில் செனறார்.
கிழக்கு கடற்கரை சாலை சம்பை பஸ்ஸ்டாப் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் காயம் அடைந்த வீரமுத்து சம்பவ இடத்தில் பலியானார். கார் டிரைவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஜெயக்குமார் 23, மீது தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்தனர்.