ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் சுற்றி திரிந்த மன நலம் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த புன்னா 36, என்பவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு குணமடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் நகரில் மன நலம் பாதித்த நிலையில் வீதிகளில் சுற்றித்திரிந்த 36 வயது வட மாநில ஆண் போலீசரால் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மையத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
பராமரிப்பு இல்லத்தில் அவருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிற்பயிற்சியும் வழங்கினர். தற்போது சில கைத்தொழில்களையும் கற்றுள்ளார்.
குணமடைந்த அவரது பெயர் புன்னா, ஒடிசா சோனேபூர் மாவட்டம் நிவ்ன பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் புன்னா பெற்றோரை தொடர்பு கொண்ட போது புன்னா தனது 20 வயதில் மனநலம் பாதித்து காணாமல் போனது தெரிய வந்தது.
நேற்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் புன்னா அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.