செய்யாறு:செய்யாறு பஸ் ஸ்டாண்டில் விநாயகர் கோவிலை ஆக்கிரமிக்க முயன்ற வி.சி., நிர்வாகியை போலீசார் தேடி வரும் நிலையில், கோவிலை இடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பஸ் ஸ்டாண்டில், அரசுக்கு சொந்தமாக, 1.16 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதிலிருந்த பழமையான விநாயகர் கோவில், குளம் ஆகியவற்றை, 1957 முதல், குறிப்பிட்ட ஜாதியின் அன்னதான சத்திர அறக்கட்டளை நிர்வாகம் நிர்வகித்து வந்தது.
செய்யாறு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்தால், அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டன. பராமரிப்பின்றி இருந்த விநாயகர் கோவிலை இடித்து, அந்த இடத்தை வி.சி., கட்சியின் இளைஞரணி மாவட்ட செயலர் தெய்வசிகாமணி ஆக்கிரமிக்க முயற்சித்தார்.
அவரது கூலியாட்களான நேரு, 36, சரத்குமார், 30, மணிகண்டன், 25, பாஸ்கர், 40, ஆகியோர் கடந்த, 17ல் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஹிந்து முன்னணியினர், செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கோவில் இடிப்பதை தடுத்தனர்.
இது குறித்து, ஹிந்து முன்னணி நகர செயலர் மோகன்ராஜ் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் முத்துசாமி, செய்யாறு போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிந்து, நேரு, சரத்குமார், மணிகண்டன், பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். தெய்வசிகாமணியை தேடி வருகின்றனர்.