அருப்புக்கோட்டை,-அருப்புக்கோட்டை நகராட்சி 15 வது வார்டில் இடியும் நிலையில் கழிப்பறை, குறுகலான வாறுகால், தேங்கும் கழிவுநீர் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதிபடுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 15 வது வார்டில் வடக்கு, தெற்கு மகாராஜபுரம் தெரு, வடக்கு, தெற்கு சிவஞானபுரம் தெரு, உச்சி மாகாளியம்மன் கோயில் தெரு, நாதஸ்வர வித்துவான் தெரு உட்பட 18 தெருக்களும், அமிர்தபுரம் காலனி, லீலாவதி நகர் உட்பட புறநகர் பகுதிகள் உள்ளன.
வார்டிற்கு உட்பட்ட விருதுநகர் மெயின் ரோட்டின் இருபுறமும் மெயின் வாறுகால் உள்ளது. இவற்றில் மண் அடைத்தும் குப்பை சேர்ந்தும் ஆங்காங்கு அடைத்துள்ளன. மழைக்காலத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் தெருக்களில் தேங்கி விடுகிறது. இதனுடன் கழிவு நீரும் கலந்து சுகாதார கேடு ஏற்படுகிறது. ஆண்டு கணக்கில் இந்த பிரச்சனை உள்ளது. வாறுகாலை தூர்வாரி, சுத்தம் செய்ய வேண்டும்.
உச்சினி மாகாளியம்மன் கோயில் தெருவில் ரோடு, வாறுகால்கள் அமைக்கப்பட வேண்டும். பல தெருக்களில் வாறு கால்கள் குறுகியதாக உள்ளது. இவற்றை அகலப்படுத்தி கழிவு நீர் சீராக வெளியேறும் வகையில் புதியதாக கட்ட வேண்டும். புறநகர் பகுதிகளான லீலாவதி நகரில் 7 தெருக்கள் உள்ளன. இவற்றில் ரோடு, வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
நகர் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. அமிர்தபுரம் காலனியில் ரோடு, வாறுகால்கள் இல்லை. ரோட்டில் கற்கள் பெயர்ந்து காலை பதம் பார்க்கிறது. இங்குள்ள பெண்கள் கழிப்பறை மேற்கூரை இடிந்து விடும் நிலையில் இருப்பதால் செல்ல பெண்கள் பயப்படுகின்றனர். கழிப்பறைக்குச் செல்லும் பாதையும் முட் புதர்களாகவும் கரடு முரடாகவும் இருப்பதால் இரவு நேரங்களில் செல்ல அச்சப்படுகின்றனர்.
வார்டிற்கு உட்பட்ட விருதுநகர் ரோட்டில் உள்ள மழைநீர் வரத்து ஓடை சீராக அமைக்கப்படாததால், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி கேந்திரமாக உள்ளது.