மேட்டுப்பாளையம்:சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த, மாணவர்களுக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, இரண்டாம் இடம் பெற்றது.
அகில இந்திய அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான, ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தில், ஓ.பி. ஜிண்டல் பள்ளியில் நடந்தது. மண்டல அளவில் முதலிடம் பெற்ற அணிகள், இப்போட்டிகளில் பங்கேற்றன. அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில், இறுதி போட்டியில், மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி அணி, சத்தீஸ்கர் ஓ.பி.ஜிண்டல் பள்ளி அணியுடன் மோதின. இதில் சச்சிதானந்த ஜோதி பள்ளி இரண்டாம் இடம் பெற்று, வெள்ளி பதக்கத்தை பெற்றது.
அதேபோன்று, 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், இறுதிப்போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி, சத்தீஸ்கர் ஓ.பி.ஜிண்டல் பள்ளி அணியுடன் மோதியது. இதில், சச்சிதானந்த பள்ளி இரண்டாம் இடம் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளையும், பயிற்சியாளர்கள் அனிதா, யோகா ஆனந்த் ஆகியோரையும், பள்ளி நிர்வாக அறங்காவலர் ராமசாமி, செயலர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.