கோவை:கோவை, ஆர்.எஸ்.புரத்தில், எஸ்.எச்.இ.ஏ.,இமிகிரேசன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், அருண் மற்றும் இவரது மனைவி ஹேமலதா ஆகியோர் சேர்ந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர்.
ஆன்லைன் வாயிலாக விளம்பரம் செய்த இவர்கள், வெளி நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக, பேஸ்புக்கில் பதிவு செய்தனர்.
இதை பார்த்த, இருகூர் ஏ.ஜி.புதுார் சாலையை சேர்ந்த எம்.எஸ்.சி., பட்டதாரி சந்திரமோகன், ஆர்.எஸ்.புரத்திலுள்ள அருண் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தார்.
அப்போது, போலந்தில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர, நான்கு லட்சம் ரூபாய் கேட்டனர். முன் பணம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பணி நியமன ஆணை வந்த பிறகு, அழைப்பதாக கூறினர். ஆறு மாதங்களாகியும் வேலைவாய்ப்பு பெற்றுத்தராமல் ஏமாற்றினர். நேரில் சென்று கேட்ட போது, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மிரட்டினர்.
மாநகர குற்றப்பிரிவு போலீசில் சந்திரமோகன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அருணை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் இது போல், மேலும் பலரிடம் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. தலைமைறைவான ேஹமலதாவை போலீசார் தேடி வருகின்றனர்.