மூணாறு:மூணாறு -- கொடைக்கானல் ரோடு அமைப்பதில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பகுதிகள் தொடர்பான பிரச்னையால் சிக்கல் நீடிக்கிறது.
தேனிமாவட்டம் கொட்டக்குடி ஊராட்சியில் சுற்றுலா பகுதியான டாப் ஸ்டேஷன் உள்ளது.
இங்குள்ள வட்டவடைக்குச் செல்லும் வழியில் கேரள வனத்துறை சோதனைச் சாவடி அருகே பிரிந்து பந்தர், பேரிச்சம் ஏரி வழியாக கொடைக்கானலை சென்றடையும் வகையில் 'எஸ்கேப் ரோடு' அமைக்கப்பட்டது.
'எஸ்கேப் ரோடு'
இரண்டாம் உலகப்போரின் போது 'மதராஸ்' என அழைக்கப்பட்ட சென்னையில் வசித்த ஆங்கிலேயர்கள் உயிருக்கு அஞ்சி கொடைக்கானலுக்கு வந்தனர்.
போர் வலுவடைந்த நிலையில் அங்கிருந்து மூணாறு வழியாக கொச்சிக்குச் சென்று, பின் சொந்த நாடுகளுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு மூணாறு -- கொடைக்கானல் 'எஸ்கேப் ரோடு' பயன்பாட்டிற்கு வந்தது.
1990 வரை பயன்பாட்டில் இருந்த ரோட்டை சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாக கூறி கேரள வனத்துறை ரோடுகளின் குறுக்கே அகழிகளை வெட்டி போக்குவரத்தை தடை செய்தது.
அதன் பின் 2003ல் ரோடு கடந்து செல்லும் பகுதி பாம்பாடும்சோலை தேசிய பூங்காவுக்கு உட்பட்டதாக மாறியது.
அந்த வழியில் ரோடு அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை, வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டும் என்பதால் மூணாறு -- கொடைக்கானல் இடையே ரோடு அமைக்கவில்லை.
மாற்று ஏற்பாடு
அதனால் கேரள அரசு மூணாறு -- கொடைக்கானல் இடையே ரோடு அமைப்பதற்கு மாற்று வழியை தேர்வு செய்தது.
அதன்படி மூணாறில் இருந்து டாப்ஸ்டேஷன், வட்டவடை கோவிலுார், கொட்டாக்கொம்பூர், தட்டாம்பாறை, கடவரி வழியாக தமிழக பகுதிக்குள் நுழைந்து கிளாவரா, போலுார், பூண்டி, கவுஞ்சி, மன்னவனுார், பூம்பாறை வழியாக கொடைக்கானல் செல்ல திட்டமிடப்பட்டு, அதற்கு இரு மாநில எல்லையான கடவரி வரை சர்வே நடத்தி முதல்கட்ட பணிகளை கேரள அரசு துவக்கியது.
அதனை கேரள வனத்துறையினர் தடுத்ததால் திட்டம் கிடப்பில் உள்ளது. தற்போது வட்டவடையில் இருந்து கடவரி வரை அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள் மட்டும் சென்று வருகின்றன.
தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள்
அங்கிருந்து கொடைக்கானல் செல்ல ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு தமிழக வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் குதிரை, கழுதை மூலம் காய்கறிகள் கொண்டுசெல்வது தொடர்கிறது.
அந்த வழியில் ரோடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றை சுற்றி ஒரு கி.மீ., தொலைவுக்கு சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக மத்திய அரசு அறிவித்ததால், அதனை நடைமுறை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது கொடைக்கானல் செல்லும் ரோட்டில் வட்டவடை நீலக் குறிஞ்சி சரணாலயத்திற்கு உட்படும் என்பதால் மூணாறு - கொடைக்கானல் ரோடு அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.