விருதுநகர்-விருதுநகர் உழவர் சந்தை பல ஆண்டுகளாக விவசாயிகள் வராமல் முடங்கிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்த விலையில் காய்கறிகள் வாங்கிய மக்களும் இவற்றை முழுமையாக செயல்பட வேண்டுமென விரும்புகின்றனர்.
விருதுநகர் புல்லலக் கோட்டை ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே 2000ல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதில் 126 விவசாய உறுப்பினர்களுடன் 48 கடைகள் செயல்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் செயல்பாட்டில் இருந்த உழவர் சந்தை காலப் போக்கில் செயலிழந்து முடங்கி விட்டது. தற்போது 4 கடைகள் மட்டுமே சிறு வியாபாரிகளால் இயக்கப்படுகின்றன.
உழவர் சந்தை திட்டம் செயல்பாட்டிற்கு வந்த நோக்கமே விவசாயிகள், பொதுமக்கள் பரஸ்பரம் பயனடைய வேண்டும் என்பதற்காக தான். காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் இடைத்தரகு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு அதிகாலை 5:30 முதல் மாலை 6:00 மணி வரை செயல்பட்டன.
இதற்கு அரசு போக்குவரத்து கழகம் குறிப்பிட்ட நேரங்களில் சுமைக் கட்டணம் இல்லாத பஸ் வசதி செய்தது. விவசாயிகளின் குடும்ப உறுப்பினரின் படத்துடன் கூடிய உழவர் அட்டை வழங்கப்பட்டது. இதற்கென தனி அதிகாரி நியமிக்கப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்பட்டது.
மக்களுக்கும் இடைத்தரகு இல்லாமல் அந்தந்த பகுதிகளில் விளைந்த காய்கறிகள் குறைந்த விலையில் கிடைத்தன. தற்போது மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இத்திட்டம் பெயரளவுக்கு மட்டுமே செயபடுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் அதிக விலை கொடுத்து காய்கறிகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாயிகள் பஸ் வசதியின்றி பாதிக்கப் படுகின்றனர். எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு கடைகளும் செயல்பட வைக்க வேண்டும் என்றனர்.
ராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை செயல்படுகிறது. மாவட்ட தலைநகரான விருதுநகரை சுற்றியுள்ள விவசாயிகளும், பொது மக்களும் பயனடையும் வகையில் உழவர் சந்தையை முழுவீச்சில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் 15 ஆண்டுக்கு முன் சிவகாசியில் 101வது உழவர்சந்தை திறக்கப்பட்டது. விவசாயிகள் வந்து செல்ல வசதியாக பஸ் ஸ்டாப் அமைத்து சிறப்பாக செயல்பட்ட நிலையில் முடங்கியது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் உழவர் சந்தை பழையபடி செயல்படும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமடைந்து மார்க்கெட்டில் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கும் காய்கறி, பழங்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராஜா கூறியதாவது:
இந்த உழவர் சந்தையில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் ஆன்லைன் முறை விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் உழவர் சந்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். உழவர் சந்தையில் சூரிய ஒளி சக்தியில் 5 மெட்ரிக் டன்னில் இயங்கும் குளிர்சாதன அறை வசதி செய்யப்பட உள்ளது. மேலும் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு விரைவில் செயல்படும், என்றார்.