சாலை மீடியன் முகப்பில் ஒளிரும் பட்டைகள் அவசியம்
மறைமலை நகர் காவல் நிலையம் அருகே, அண்ணா சாலை நான்கு முனை சந்திப்பில், சாலை நடுவே மீடியன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மீடியன் முகப்புப் பகுதி, கான்கிரீட் சுவர் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில், இங்கு சுவர் இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சிறு சிறு விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த சுவர்களில், இரவில் ஒளிரும் பட்டைகள், ஸ்டிக்கர் போன்றவை அமைக்க வேண்டும்.
- ப.பிரகாஷ், மறைமலை நகர்.
தேசிய நெடுஞ்சாலையில் செடிகள் அகற்றப்படுமா?
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம், பாக்கம் முதல் மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் வரையிலான சாலைப் பகுதியில், செடிகள் வளர்ந்து, சாலையை ஆக்கிரமித்து உள்ளன.
இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், வாகனத்தை முந்திச் செல்ல முற்படும் போதும், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலை ஓரம் உள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
- ந.தமிழ்வேந்தன், மதுராந்தகம்.