வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிட த.மா.கா., முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் வாசன் கூறியுள்ளார். ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க, முன்னாள் மாநில தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து இறந்தவருமான திருமகனின் தந்தை இளங்கோவன், தயக்கம் காட்டுகிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - த.மா.கா., போன்ற கட்சிகள் இருந்தன. த.மா.கா., வேட்பாளர் யுவராஜ், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது கூட்டணியில் பா.ம.க., இல்லை. அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் உள்ளது.
பழனிசாமி தரப்பினர் எடுக்கும் முடிவை அறிந்த பின், தங்களது ஆட்டத்தை துவங்க, பன்னீர்செல்வம் தரப்பு அமைதி காக்கிறது. நேற்று காலை 11:00 மணிக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர், வாசன் வீட்டுக்கு சென்றனர்; இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின், வாசன் அளித்த பேட்டி: தேர்தல் குறித்து, வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர். தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமியுடன், தொலைபேசியில் பேசினேன். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அ.தி.மு.க., - த.மா.கா., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில், மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. மாநிலத்தில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்காத ஆட்சியாளராக, தி.மு.க., அரசு செயல்படுகிறது; வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. எதிர்பார்த்த மக்கள், ஏமாந்த நிலையில் உள்ளனர். எதிர்மறை ஓட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இவை, எங்கள் கூட்டணிக்கு சாதகமாக தேர்தலில் அமையும். ஒருமித்த கருத்தோடு ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.
கடந்த முறை நாங்கள் தான் போட்டியிட்டோம். இன்றைய அரசியல் சூழலில் கூட்டணிக்கு லாபம் ஏற்பட வேண்டும். இடைத்தேர்தல் வெற்றி, வரும் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும். அதற்கேற்ப வியூகங்கள் அமைத்து, வெற்றிக்கு வழிவகுக்கும் நிலையை, கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏற்படுத்துவோம்.
பா.ஜ.,வும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும். த.மா.கா., முடிவு, வெற்றிக்கான ஒருமித்த முடிவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக வேட்பாளருக்கு த.மா.கா., ஆதரவு
இதற்கிடையில் ஜி.கே.வாசன்இன்று (ஜன-20) வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் அதற்கு தமாகா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். "தற்போதைய அரசிய் சூழல், எதிர்கால பார்லி., தேர்தல் . தமிழக மக்கள் மற்றும் கூட்டணியின் நலனை கருத்தில் கொண்டு கூட்டணியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமாகா ஏற்று கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு நமது கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
ஆதரவாளர்கள் விருப்பம்
இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் தமிழக காங்., தலைவர் இளங்கோவனிடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீட்டுக்கு, ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று திரண்டு வந்தனர். இளங்கோவனை சந்தித்து, இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தினர்.
'இந்த தொகுதியில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய திருமகன், தொகுதி மக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகளை, தந்தை என்ற முறையில் தொடர வேண்டும். 'தேர்தலில் எளிதாக வெற்றி பெற, நீங்களே போட்டியிட வேண்டும்' என இளங்கோவனிடம், அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனாலும், இளங்கோவன் பிடி கொடுக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் ஈரோடு சென்று, நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதி மக்களை சந்தித்து, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பதாக, தன் ஆதரவாளர்களிடம் இளங்கோவன் உறுதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்பது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், கடலுாரில் இன்று நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிகளை கவனிக்க, தமிழக பா.ஜ., சார்பில், 14 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பா.ஜ., செயற்குழு கூட்டம், இன்று கடலுார் மாவட்டத்தில் நடக்கிறது. அண்ணாமலை தலைமையில் நடக்கும் கூட்டத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடலாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பின், தமிழகத்தில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில், பா.ஜ.,வைச் சேர்ந்த சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜ., போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது அண்ணாமலை விருப்பம். இது குறித்து இன்று ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விவாதிக்க, வரும் 23ல் தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது.சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு, பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலர் சுதீஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கட்சி செயல் தலைவராக பிரேமலதாவை தேர்வு செய்வது குறித்தும், இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, வரும் 23ல், நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடக்க உள்ளது.