சிவகாசி-மாவட்டத்தில் ரோட்டோரத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு புகையால் சுவாச பிரச்சனை, வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் வருகிறது.
மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் தினந்தோறும் குப்பைகள் சேர்கின்றன. கிராம பகுதிகளை விட நகர் பகுதிகளில் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
இவைகளின் மூலம் கிடைக்கும் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டிகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பான்மையான குடியிருப்பு பகுதிகளிலோ, தொழிற்சாலைகள், கடைகள் உள்ள பகுதிகளிலோ குப்பை தொட்டிகள் வைத்திருப்பதில்லை.
குப்பை வாங்குவதற்கும் துாய்மை பணியாளர்கள் பெரும்பாலும் செல்வதுமில்லை. இதனால் கழிவுகள் ரோட்டில் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தொட்டிகள் வைத்திருந்தாலும், அதனை முறையாகப் பயன்படுத்தாமல் மக்கள் அலட்சியப் போக்கினை கடை பிடிக்கின்றனர்.
கொட்டப்படும் குப்பைகளை உள்ளாட்சி நிர்வாகம் முறையாக சேகரித்து, நகரின் வெளிப்பகுதியில்தான் கொட்டி அழிக்க அல்லது எரிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. எங்கு குப்பை அதிகளவில் சேர்கின்றதோ, பெரும்பாலும் அங்கேயே அதில் தீவைத்து எரித்து விடுகின்றனர்.
பாலிதீன் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவைகளும் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இவைகளை ரோட்டின் அருகே எரிக்கும் பொழுது ஏற்படுகின்ற புகையால் கண் எரிச்சல், மூச்சு திணறல், இளைப்பு, போன்றவை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
மேலும் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. புகை ரோட்டில் பரவி பாதையை மறைத்து விடுகின்றது.
போக்குவரத்து நிறைந்த ரோட்டில் தீ வைத்து எரிப்பதால் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அனைத்து பகுதிகளுக்கு குப்பையை வாங்க செல்வதோடு, குப்பையை அதற்குரிய இடத்தில் கொட்டி திடக்கழிவு மேலாண்மை தீவிர படுத்த வேண்டும்.