கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, மகாலட்சுமி நகர் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ளது. இங்கு, 1,200 வீடுகளுக்கு மேல் உள்ளன.
மகாலட்சுமி நகர் பிரதான சாலையில், காலை மற்றும் மாலை வேளைகளில், கல்லுாரி பேருந்துகள், தனியார் பள்ளிப் பேருந்துகள் என வந்த வண்ணம் உள்ளன. இது குறுகிய சாலையாக இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, இந்த சாலையை அகலப்படுத்தி தரவும், வேகத்தடைகள் அமைத்து தரவும், அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் மூக்காண்டி கூறியதாவது:
மகாலட்சுமி நகர் தெருக்களுக்கு பெயர் பலகை இல்லை. மேலும், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை அருகில் உள்ளதால், எப்போதும் வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இச்சாலை, குறுகியதாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, மகாலட்சுமி நகருக்கு வரும் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.