தாம்பரம்:சென்னை புறநகரின் பேருந்து நிறுத்தம், மேம்பாலச் சுவர்களில், 'போஸ்டர்' ஒட்டி, நாசப்படுத்தும் வேலை அதிகரித்து வருகிறது.
சென்னையில் பேருந்து நிழற்குடை, தெருப் பெயர் பலகை, மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அரசுக் கட்டடங்களின் சுவர்களில் 'போஸ்டர்' ஒட்டுவது அதிகரித்துள்ளது.
இதேபோல், சென்னை புறநகர் பகுதியான, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளிலும் 'போஸ்டர்' ஒட்டும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.
குரோம்பேட்டை, கிழக்கு தாம்பரம் பேருந்து நிறுத்தங்களில், தனியார் விளம்பரம் மற்றும் அரசியல் கட்சிகளின் 'போஸ்டர்'கள் வரிசையாக ஒட்டப்பட்டுள்ளன.
தாம்பரம், எம்.ஐ.டி., பல்லாவரம்- துரைப்பாக்கம், பல்லாவரம் மேம்பாலங்களின் சுவர்களில் அரசியல் கட்சிகளின் 'போஸ்டர்'கள் போட்டி போட்டு ஒட்டப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்தில் சிக்குகின்றனர். மற்றொரு புறம், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், மேம்பாலச் சுவர்களில் போஸ்டர் ஒட்ட, முன்கூட்டியே 'புக்கிங்' செய்வதும் நடந்து வருகிறது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.
இந்த சுவர்களில் அவ்வப்போது, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் ஒட்டப்படுகிறது. அதே நேரத்தில், விதிமுறையை மீறி, இது போன்ற செயலில் ஈடுபடும் தனியார் வாகனங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அபராதம் விதிக்கவும், தாம்பரம் மாநகராட்சி முன்வர வேண்டும்.
மாநகராட்சி-, நெடுஞ்சாலைத் துறை-, போலீசார் இணைந்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே, சென்னை புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் போஸ்டர் கலாசாரத்தை கட்டுப்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.