விருதுநகர்,;விருதுநகர் நகராட்சியில் மேற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் உப்பு சுவை அதிகரித்து வருவதால் அப்பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்கும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.
விருதுநகர் நகராட்சியில் 10 முதல் 15 நாட்கள் இடைவெளி வரை குடிநீர் வினயோகமாகிறது. தாமிரபரணி குடிநீரும், உள்ளூர் ஆதாரமான ஆனைக்குட்டமும் தான் முக்கிய நீராதாரமாக உள்ளன. தாமிரபரணி குடிநீர் 20 முதல் 25 லட்சம் லிட்டர் வரையும், உள்ளூர் நீராதாரங்கள் 20 லட்சம் லிட்டர் வரையும் பெறப்படுகிறது.
நகரின் கிழக்கு பகுதியில் கல்லுாரி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டில் மூலம் தாமிரபரணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேற்கு பகுதியில் ஆனைக்குட்டத்தில் உள்ள நீர் வினியோகிக்கப்படுகிறது.
அங்குள்ள கிணறுகளில் தண்ணீரானது உப்புச்சுவை மிகுந்து காணப்படுவதால் அங்கிருந்து குடிநீர் விநியோகமாகும் பகுதிகளிலும் குடிநீர் உப்புச்சுவையுடன் உள்ளது. பாத்திமா நகர், பர்மா காலனி, சீதக்காதி தெரு, பெருமாள் கோயில் தெரு, அவ்வையார் தெரு, நீராவித்தெரு, தெற்கு ரத வீதி,. பட்டுத்தெரு, வேலுச்சாமிநகர், கணேஷ் நகர், கிழக்கு, மேற்கு பாண்டியன் காலனி, நேருஜி நகர், கச்சேரி ரோடு பகுதிகளில் உப்பு சுவையுடன் கூடிய குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
நகராட்சி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு ஆனைக்குட்டத்தின் உறைகிணறுகளில் உள்ள நீர் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் இது இருக்க வேண்டிய அளவை காட்டிலும் கூடுதலாகவே உப்பு சுவை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த நீரை பயன்படுத்தினால் சிறுநீரக கல், செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இப்பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறியதாவது: தாமிரபரணி குடிநீரை மேற்கு பகுதிக்கும் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. விரைவில் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்படும், என்றார்.
Advertisement