சென்னை:புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் காலனியில் உள்ள, குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் காலனியில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இதில், மர்ம நபர்கள், டிச., 26ம் தேதி மனித கழிவு கலந்து, அசுத்தம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, வெள்ளனுார் காவல் நிலையத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், அரசுக்கு கண்டனம் எழுந்தது. இது, சட்டசபையிலும் எதிரொலித்தது.
இதையடுத்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய, வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, டி.எஸ்.பி., பால்பாண்டி தலைமையில் விசாரணை நடக்கிறது. முதற்கட்டமாக ஆதிதிராவிடர் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பஞ்., தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தனிப்படை போலீசார் சம்பவத்தன்று, நீர்த் தேக்க தொட்டி அருகே இயக்கத்தில் இருந்த, மொபைல் போன் 'சிம் கார்டு'கள் குறித்த தகவலையும் திரட்டி உள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.
சந்தேக நபர்களின் நடமாட்டம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.