சென்னை:இ - சேவை இணையதளத்தில், பட்டா மாறுதல் விபரம் அறிவதில் நிலவிய கோளாறுகள் சரி செய்யப்பட்டு உள்ளதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் புதிதாக, வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பிக்கின்றனர். பத்திரப்பதிவு அடிப்படையில் சார் - பதிவாளர் அலுவலகம் வாயிலாகவும், இ - சேவை மையங்கள் வாயிலாகவும், இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக, 30 நாட்களுக்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் நடவடிக்கை எடுக்காமல், வருவாய் துறை அதிகாரிகள் நிராகரித்து விடுவதாக புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்கள், அதன் தற்போதைய நிலவரம் குறித்து அறிய, இ - சேவை இணையதளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்தாலும், தகவல்கள் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இ - சேவை இணையதளம் மற்றும் 'தமிழ் நிலம்' சாப்ட்வேரில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, பொது மக்கள் பட்டா மாறுதலுக்கு இ - சேவை இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்; ஏற்கனவே பதிவான விண்ணப்பங்களின் நிலவரத்தையும் அறியலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.