சங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்கப் பள்ளியில் இடம் பற்றாக்குறை காரணமாக ஒரே அறையில் 2 வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது.
சங்கராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய இந்து தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. 170 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5 ஆசிரியர்கள் பணி செய்கின்றனர். இப்பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டடங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சங்கராபுரம் கோட்டை மேட்டில் இயங்கி வந்த வட்டாரக் கல்வி அலுவலக கட்டடங்கள் சேதமடைந்ததால், பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
பள்ளியில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருவதால், வளாகம் முழுதும் இலவச பாட புத்தகங்கள், இலவசப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லாமல் ஒரே அறையில் இரு வகுப்புகள் நடக்கிறது.
இரு ஆசிரியர்கள் ஒரே அறையில் பாடம் நடத்துவதால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டித் தரவும், மாணவர்கள் சிரமம் இன்றி படிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.