சென்னை:தமிழக அரசின் சேமிப்பு கிடங்குகளில், நவீன தொழில்நுட்பத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நேற்று ஜெர்மனி துாதர் மைக்கேலா குச்லருடன் ஆலோசனை நடத்தினார்.
உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, 130 கோடி கிலோ கொள்ளளவில், 260 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அவற்றில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு, 76 கோடி கிலோ கொள்ளளவில், 269 கிடங்குகளும்; கூட்டுறவு சங்கங்களுக்கு 55 கோடி கிலோ கொள்ளளவில் 4,044 கிடங்குகளும் உள்ளன. பல கிடங்குகள் சேதமடைந்து உள்ளதால், சீரமைக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் சேமிப்பு கிடங்குகளில் தானிய மூட்டைகளை கையாளுவது, அவற்றை அடுக்கி வைப்பது போன்ற வற்றில், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணனை, நேற்று ஜெர்மனி நாட்டின் துாதர் மைக்கேலா குச்லர் சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழக அரசின் சேமிப்பு கிடங்குகளில் நவீன தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்றம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
Advertisement