சென்னை:'மின் இணைப்பு எண்ணுடன் இதுவரை, இரண்டு கோடி நுகர்வோர், 'ஆதார்' எண்ணை இணைத்துள்ளனர்; ஆதார் எண் இணைத்த அனைவருக்கும் நன்றி' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழக மின் வாரியம், இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் வழங்கும் வீடுகள் உட்பட, 2.67 கோடி மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணியை நவ.,15ல் துவக்கியது.
நேற்று வரை, இரண்டு கோடி நுகர்வோர், தங்களின் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று விடுத்த செய்தி குறிப்பு:
தமிழக மின் வாரியத்தை மேம்படுத்த துவங்கப்பட்ட, மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணியில், இதுவரை, இரண்டு கோடி இணைப்புகள் இணைக்கப் பட்டு உள்ளன.
ஆதார் எண்ணை இணைத்த மின் நுகர்வோர் அனைவருக்கும், நன்றிகள். இதுவரை, ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இம்மாதம், 31ம் தேதிக்குள் இணைத்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.