புவனகிரி : கணவருடன் ஸ்கூட்டியில் சென்ற பெண், டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி இறந்தார். கணவர் மற்றும் 3 வயது குழந்தை அதிருஷ்டவசமாக தப்பினர்.
புவனகிரி தாலுகா மிராளூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலையரசன், 35; தனியார் துறையில் வேலை செய்கிறார். இவர் நேற்று, சிதம்பரம் அருகே கூத்தன்கோவில் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்க டிஎன்91 சி7841 என்ற பதிவெண் கொண்ட ஸ்கூட்டியில் மனைவி பிரேமலதா மற்றும் 3 வயது குழந்தையுடன் நேற்று புறப்பட்டார்.
புவனகிரி போலீஸ் குடியிருப்பு அருகில் நேற்று மதியம் சென்றபோது, சாலை பணிக்காக மணல் ஏற்றிக் கொண்டு அதிவேகத்தில் வந்த கேஏ51 ஏஎப்5019 என்ற பதிவெண் கொண்ட ராட்சத டிப்பர் லாரி ஸ்கூட்டி மீது மோதியது.
இந்த விபத்தில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பிரேமலதா சம்பவ இடத்திலேயே இறந்தார். கலையரசன் மற்றும் 3 வயது குழந்தை அதிருஷ்டவசமாக தப்பினர்.
விபத்தில் இறந்த பிரேமலதா உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அவ்வழியாக சென்ற சிலர் மயங்கி விழுந்தனர். விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். விபத்தால் நேற்று புவனகிரியில் மிகுந்த பரபரப்பான சூழல் ஏற்பட்டது.