ஸ்ரீநகர் : பார்லிமென்ட் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவுக்கு, விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயேச்சை உறுப்பினர் தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மீதான விவாதத்தின் போது, காங்., - பா.ஜ., உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கடும் அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2001 டிசம்பரில், பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான அப்சல் குரு கைது செய்யப்பட்டான். வழக்கு விசாரணையின் முடிவில், அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்து, அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி, ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயேச்சை உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத் தீர்மானம் கொண்டு வந்தார்.
நேற்று சபை கூடியதும் இந்த தீர்மானத்தை ரஷீத் முன்வைத்ததும், விவாதம் துவங்குவதற்கு முன், பாரதிய ஜனதா மற்றும் தேசிய பாந்தர் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுங்கட்சி தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாரதிய ஜனதா உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சபையில் கடும் கூச்சல் நிலவியது. இரு கட்சி உறுப்பினர்களும் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் போட்டனர்.
"தீர்மானம் தேச நலனுக்கு எதிரானது' என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். அதை சபை நடவடிக்கையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சபையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால், சபையை 30 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். இரண்டாவது முறை சபை கூடியதும், அமளி நிலவியதால் மறுபடியும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக சபை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், சபை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் முகம்மது அக்பர் அறிவித்தார். அப்போது அவர், ""சட்டசபை மீன் மார்க்கெட் போல மாறிப்போனது துரதிருஷ்டவசமானது,'' என்றார்.
அமளி குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், "சபை நடவடிக்கைகள் ஏதும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது' என்றார்.
ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரும் தீர்மானம், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சில தரப்பினர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து தான், காஷ்மீர் சட்டசபையில், அப்சல் குருவுக்கு ஆதரவான தீர்மானத்தை, சுயேச்சை எம்.எல்.ஏ., கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெஹ்பூபா முக்தி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் : காஷ்மீர் சட்டசபையில் நடந்த நாடகத்தை, தேசிய மாநாட்டு கட்சி இயக்கியது. காங்கிரசும், பாரதிய ஜனதாவும் நடிகர்களாகச் செயல்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE