புதுச்சேரி:''அரசு மற்றும் நீதித் துறையின் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதை சிலர் வழக்கமாக்கியுள்ளனர். ஜனநாயகத்தின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு, சுதந்திரமான நீதித்துறை அவசியம்,'' என, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார்.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 13.79 கோடி ரூபாய் மதிப்பில் வக்கீல்களுக்கான அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக் கூடாது. நீதி விரைந்து தரப்படுதல் அவசியம். நீதிமன்றத்தை நவீனப்படுத்த வேண்டும். அதற்கு நீதிமன்றங்களில், '5ஜி' சேவை விரிவுபடுத்தப்படும்.
மறுசீரமைப்பு
நீதிபதிகள் நியமனம் குறித்து, 'கொலீஜியம்' தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய பின், எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த கடிதத்தை, அரசியலமைப்பு பெஞ்ச் அடிப்படையில் தான் எழுதினேன். இது அரசாங்கமும், கொலீஜியமும் ஒன்றிணைந்து, நீதிபதிகள் நியமனத்திற்கான நடைமுறையை மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.
அரசியலமைப்பு பெஞ்சின் உத்தரவை முன்னெடுத்துச் செல்வது, சட்டத்துறை அமைச்சரான என் கடமை. சிலர் எல்லாவற்றிலும் ஒரு பிரச்னையை பார்க்க முயற்சிக்கின்றனர்.
கொலீஜியம் முறை நிலவும் வரை, மாற்று அமைப்பு இல்லாத வரை மற்றும் பார்லிமென்ட் புதிய முறையை கொண்டு வராத வரை, தற்போதைய முறையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,
நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்புக்கு புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு தேவை. தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து, சில நேர்மறையான நடவடிக்கைகளை நான் ஏற்கனவே எடுத்துள்ளேன்.
அரசு மற்றும் நீதித்துறையின் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதை சிலர் வழக்கமாக்கியுள்ளனர். ஜனநாயகத்தின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு, சுதந்திரமான நீதித்துறை அவசியம்.
சட்டம் இயற்றும் துறையும், நீதித்துறையும் நாட்டுக்காக உழைக்கின்றன. ஆனால், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்ற முடியாது.
புதுச்சேரியில் ஐகோர்ட் கிளை அமைப்பது தொடர்பாக பரிசீலிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.