கோவை:தென் மண்டல அளவிலான பல்கலைக்கு உட்பட்ட தடகளப்போட்டிகள் சென்னை விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலையில் நடந்தது. இதில், பல்வேறு பல்கலைகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாணவ - மாணவியருக்கு, 100மீ., 200மீ., 400மீ., தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் என்.ஜி.பி., கல்லுாரி மாணவர்கள் தனுஷ் ஆதித்யன் மற்றும் ஜீவன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.110மீ., தடையோட்டத்தில், தனுஷ் ஆதித்யன் தங்கம் வென்றார்.
இதேபோல், 400மீ., தொடர் ஓட்டத்தில் தனுஷ் ஆதித்யன் மற்றும் ஜீவன் குமார் வெண்கலம் வென்றனர்.வெற்றி பெற்ற இருவரும், அகில இந்திய பல்கலை தடகளப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரி செயலாளர் தவமணி தேவி, முதல்வர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் தனசிங், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.