சென்னை:''சட்டம் - ஒழுங்கிற்கு சவால் விடும், எந்த சக்திகளையும் அனுமதிக்கக் கூடாது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துஉள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில், மாநில சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கோவை மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவங்களில், காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறப்பாக செயல்பட்டது.
எனினும் இம்மாதிரி சம்பவங்கள் தொடர்பாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, காவல் துறையின் முக்கிய பிரிவுகளுக்கு இடையே, வலுவான ஒருங்கிணைப்பு தேவை.
தொழில் அமைதி தொடர, தொழிற்சாலைகள் உள்ள பகுதியில், எஸ்.பி.,க்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இதில் தாமதம் காணப்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகி விடும்.
சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும், எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்ற தடுப்பு நடவடிக்கைகளில், எஸ்.பி.,க்கள், கமிஷனர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.
புகார் அளிக்க வரும் ஏழைகள், குறிப்பாக பெண்களை, மனித நேயத்தோடு அணுகி, அவர்களது புகாரை பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில நுண்ணறிவுப் பிரிவு, கியூ பிரிவு அனுப்பும் முக்கிய தகவல்களை, உடனுக்குடன் கள விசாரணை செய்து, தலைமையகத்துடன் முழு ஒருங்கிணைப்போடு, எஸ்.பி.,க்களும், கமிஷனர்களும் செயல்பட வேண்டும்.
களப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து, எஸ்.பி.,க்கள் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரிக்க வேண்டும். காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகளில், அடிக்கடி நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் அமைப்புகளோடு, அவ்வப்போது கலந்துரையாடி, மக்களின் உண்மையான நண்பனாக திகழ வேண்டும்.
மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றாத காவல் அலுவலர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பாக மக்கள் பணியாற்றும் காவல் அலுவலர்களை ஊக்குவிக்க வேண்டும். போலீஸ் நிலையம் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இதை, டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். இதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு, முதல்வர் பேசினார்.
கூட்டத்தில், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திரரெட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,க்கள், வீடியோ கான்பரன்ஸ் வழியே பங்கேற்றனர்.