விழுப்புரம் : 'மக்கள் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகளுக்கு எளிதாக, விரைவாக தீர்வு காண முடியும்' என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா பேசினார்.
விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரியில் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நேற்று நடந்த விழாவில், அவர் பேசுகையில்,'தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றங்களையும், சட்ட உதவி முகாம்களையும் ஏராளமாக நடத்தியுள்ளோம். மக்கள் நீதிமன்றங்கள் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு கிடைத்திருக்கிறது.
இரு தரப்பினரும் அமர்ந்து பேசி, சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. செலவின்றி எளிதாக, விரைவாக தீர்வு கிடைப்பதால் மக்கள் நீதிமன்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பல வழக்குகளில் தீர்வு காண, நீதிமன்றங்களில் 5 முதல் 10 ஆண்டுகள் கால அவகாசம் ஏற்படும் நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் உடனே தீர்வு காண முடியும். இதற்கு அப்பீல் இல்லை. கால விரயமின்றி இறுதி தீர்ப்பும் கிடைத்து விடும்' என்றார்.
தொடர்ந்து, ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசுகையில், 'அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டது. இதன் மூலம், இலவச சட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் நீதிமன்றங்கள், சட்ட உதவி முகாம்கள் என கடந்த 2 ஆண்டுகளில், 10 லட்சம் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது' என்றார்.
Advertisement