ராணிப்பேட்டை,:''தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் அரசாங்கம் அல்ல; மாலிக் காபூர் அரசாங்கம்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியிலுள்ள வசிஷ்டேஷ்வரர் கோவிலில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
அப்பகுதியில் பலர் விவசாயம் செய்து வந்த 52 ஏக்கர் நிலத்தை, வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என, கடந்த மாதம், மாவட்ட நிர்வாகம் ஆணை வழங்கியது.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த அவர், பின், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் அரசாங்கம் அல்ல; மாலிக் காபூர் அரசாங்கம். நாடு முழுவதும், '2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலை போல, ஏழு மடங்கு கொண்ட, 12.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என, அபகரிக்கப்பட்டுள்ளது.
வேப்பூர் பகுதியில் நீதிமன்றத்தின் மூலம், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, 53 ஏக்கர் விளைநிலத்தை, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என ஆணை தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கி, மாவட்ட நிர்வாகம் தவறு செய்துள்ளது.
அடுத்த, 24 மணி நேரத்திற்குள் அந்த நிலங்களை மீட்டு, விவசாயிகளிடம் வழங்கவில்லை என்றால், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.
ஸ்டாலின் அரசு, ஹிந்துக்களுக்கு விரோதியாக செயல்படுகிறது. சமீப காலமாக, ஹிந்துக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக, ஒரு லட்சம் புகார்கள் எனக்கு வந்துள்ளன.
அவற்றை ஒருங்கிணைந்து, உச்ச நீதிமன்றம் மூலம், ஹிந்துக்கள் சொத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 12 - 13ம் நுாற்றாண்டில், டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் தலைமை படைத் தலைவர் மாலிக் காபூர். கில்ஜியின் மனதறிந்து செயல்பட்டவர். தமிழகத்தில், படையெடுத்து, ஏராளமான செல்வ வளங்களை எடுத்துச் சென்றனர்.
தற்போது ஸ்டாலின், காபூர் போல சில சக்திகளுக்கு அடிமையாகி, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற கருத்தில், ராஜா பேசினார்.